தூத்துக்குடி (16 பிப் 2020): மக்களைப் பற்றி சிந்திப்பவர்களைத்தான் மக்களும் சிந்திக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பெரியசாமி பேரன் திருமண விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது, மேலும் தெரிவித்ததாவது:
தூத்துக்குடியில் தி.மு.க.வுக்கு தூணாக, தலைவர் கலைஞரின் முரட்டு பக்தனாக விளங்கிய பெரியசாமியின் பேரன் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி இது. பெரியசாமி இயக்க தோழர்களோடு இணைந்து, பிணைந்து அவர் செய்துள்ள பணிகளை எல்லாம் நாம் இன்றும் நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அதனால்தான் கலைஞர், அவரை செல்லமாக முரட்டு பக்தன் என்று அழைத்தார்.
அவருடைய வழிநின்று, அவரது மகள் கீதாஜீவன் இந்த மாவட்டத்தில் கழகத்தை வழிநடத்திக்கொண்டு இருக்கிறார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியைக் கூட கழகத்துக்கு பயன்படக்கூடிய வகையில், கழக பிரச்சார நிகழ்ச்சியாகவே நடத்தி உள்ளார். மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்து, நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் எல்லாம் நன்றாக தெரியும். அது மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் நடைபெறும் ஆட்சியாக இருந்தாலும் சரி, எந்த உணர்வோடு ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்பது மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும்.
நாடு முழுவதும் போராட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம், கண்டன கூட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நாட்டு நடப்புகளை நன்றாக புரிந்து கொண்டு, வரக்கூடிய காலங்களில் உங்களுக்கு பாடுபடக்கூடியவர்கள் யார், உங்களுக்கு பணியாற்றக் கூடியவர்கள் யார், உங்கள் பிரச்சனைகளை பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் யார் என்பதை மட்டும் சிந்தித்துப் பார்த்து அவர்களுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் .
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.