ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

Share this News:

சென்னை (12 அக் 2020): திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் எண்ணம் நிறைவேறாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பக்குவப்பட்ட புரிந்துணர்வோடும், பண்பட்ட நேச மனப்பான்மையோடும், தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெகுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தி.மு.கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்குள்ளே, ஏதாவது திருகு தாளங்களைச் செய்து, தூய சுமூகமான உறவு நிலையைக் கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. ஊசிமுனைக் காதளவு துளையேனும் போட்டு, கழகக் கூட்டணியின் கட்டமைப்பை அசைக்க முடியுமா என்று அவர்கள் பார்க்கிறார்கள்.

அவர்களுடைய ஆசையும் நோக்கமும் பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த வழியிலாவது உதவிட வேண்டும் என்பதுதான். அதற்கு ஓரிரண்டு பத்திரிகைகள் – ஊடகங்கள் துணை போவதும், அரசியல் விமர்சகர் – பத்திரிகையாளர் போர்வையில் ஒருசார்பு கருத்தாளர் சிலர் நுழைந்து விரிவுரை ஆற்றுவதும், எந்தவித பலனையும் தந்துவிடப் போவதில்லை என்பதை நன்கு அறிந்தே செய்கிறார்கள். அது எத்தகைய நடுநிலை, எப்படிப்பட்ட நேர்மை, எவ்வாறான மக்கள் பணி என எண்ணிப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது.

200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. போட்டியிடப் போகிறது என்று ஓர் அனுமானத்தை மையமாக வைத்து விவாதிக்கிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாகி, கூட்டணிக் கட்சிகள் ஒருமுறை அல்ல, இரண்டு மூன்று முறை அமர்ந்து பேசி, போட்டியிடப் போகும் தொகுதிகள் இறுதி செய்யப்படுவதுதான் வாடிக்கை. அதற்குள் இவர்கள் ஏன் இவ்வளவு அவசரப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இவையெல்லாம் விவாதத்திற்கான பொருளே அல்ல!

அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில், எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply