5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நிறுத்த – களத்தில் இறங்கிய மாணவர்கள்!

Share this News:

சேலம் (27 ஜன 2020): சேலம் பாகல்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நிறுத்தக் கோரி மாணவர்கள் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 26 குடியரசு தினவிழாவை முன்னிட்டு நேற்று, நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் அந்தந்த கிராமங்களில் நடைபெற்றன. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பாகல்பட்டி பஞ்சாயத்தில் உள்ள செங்கானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். இதில், அரசுப் பள்ளி குழந்தைகள் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றச் சொல்லி கோரிக்கை மனு கொடுத்தனர்.

பாகல்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் பற்றாளர் நிலாயினி, ஊராட்சிச் செயலாளர் பாண்டியன், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பழனியம்மாள், துணைத் தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

பல விவாதங்களுக்குப் பிறகு இறுதியாக அந்தக் கோரிக்கை மனு மீது ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல பல கிராமசபை கூட்டங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.


Share this News:

Leave a Reply