சென்னை (14 செப் 2020): ஒன்றிணைவோம்; மாணவர்களோடு துணை நிற்போம் என்று நடிகர் சூர்யா மற்றும் ஒரு பரபரப்பு வீடியோ ட்விட் வெளியிட்டுள்ளார்.
நீட் தேர்வு அச்சம்காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை.
கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்
இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும், ஒவ்வொருத்தரும் படிச்சா இந்த நாடே மாறும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களடைய கல்வியை பாதியில் கைவிட்டு இருக்கிறார்கள். நாம நினைச்சா அதை மாத்திடலாம்” என்று பதிவிட்டுள்ளார்.
ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…#AgaramCovidEduFund pic.twitter.com/ZTIZN5rQCA
— Suriya Sivakumar (@Suriya_offl) September 14, 2020