தப்லீக் ஜமாஅத்தினர் அப்பாவிகள் – உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்!

Share this News:

புதுடெல்லி (18 ஏப் 2020): தேசத்தின் ஒவ்வொரு முஸ்லிமும் தப்லீகியை பின்பற்றுபவர்கள் இல்லை; தப்லீகிகள் அனைவருமே கொரோனாவால் பாதிக்கப்படவும் இல்லை என்று புதுதில்லி சிறுபான்மை கமிஷன் தலைவரான டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான் மற்றும் உறுப்பினர் கர்தார் சிங் கோச்சார் தெரிவித்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு,ம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் கான், கர்தார் சிங் கோச்சார் ஆகியோர் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

“டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அப்பாவிகள்தான். இந்த பூமிப் பந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறரைப் போன்றவர்கள்தான் அவர்களும். இத்தகைய கோர விளைவுகள் ஏற்படும் என புதுதில்லி தப்லீக் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கணிக்காமல் விட்டுவிட்டனர். அதனால் திட்டமிட்டபடியே மாநாட்டை நடத்தியும் உள்ளனர்.

டெல்லி துர்க்மேன் கேட் பகுதியை மையமாக கொண்ட தப்லீக் ஜமாத் மார்ச் தொடக்கம் முதலே அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறது. புதுதில்லி நிஜாமுதீன் தப்லீக் ஏற்பாட்டாளர்கள் மட்டுமே கவனக்குறைவாக இருந்தனர் என்பது அல்ல.

லாக்டவுன் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பின்னரும் கூட நாட்டின் பல பகுதிகளில் அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் அசட்டையாக இருந்தனர் என்பதும் நிதர்சனம். தப்லீக் ஜமாத் மார்க்சில் இருந்தவர்களை தனிமைப்படுத்தியது, அவர்களை தேடி பரிசோதனைக்குட்படுத்தியதும் சரியான நடவடிக்கைதான்.

ஆனால் இதை அரசு அதிகாரிகள் வெளிப்படுத்திய விதமும் ஊடகங்கள் ஒளிபரப்பிய முறையும்தான் கவலைக்குரியது. இதனால் இந்த தேசத்தில் ஒவ்வொரு தப்லீகி நபருமே சந்தேகத்துக்குரிய நபராகவும் வேட்டையாடப்படக் கூடிய நபராகவும் மாறும் நிலை ஏற்பட்டது. இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த தப்லீக் உறுப்பினருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்திருக்கிறது.

உள்ளூர் மக்களின் சித்திரவதைகளால் அவர் தற்கொலை செய்ய நேரிட்டது. போபாலில் நடைபெற்ற தப்லீகி மாநாட்டில் பங்கேற்றதற்காக டெல்லியில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் பிப்ரவரி 25-ந் தேதி முதல் ஒரு பகுதி மக்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் தப்லீக் உறுப்பினர்களை சித்திரவதை செய்ய வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் : திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Share this News:

Leave a Reply