சேலம் (17 ஏப் 2020): கொரோனா தொற்று பாதிக்கப் பட்ட ஐந்து பேர் உட்பட கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்த 16 பேர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 13,430 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 448 பேர் உயிரிழந்துள்ளனர். 1768 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் தப்லீக் ஜமாத்தினர் பலரும் கொரோனா தொற்று மற்றும் சந்தேகத்தின் பேரில் தமிழகம் முழுவதும் தனிமைப் படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றனர். பலர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் வருகின்றனர்.
இவர்களில் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 11 பேரும் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 16 பேர் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது இவர்கள் அனைவரும் பூரண நிவாரணம் பெற்று சேலம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது கொரோனா தொற்று பரப்பியதாகச் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இவர்கள் 16 பேர் மீதும் நீதிமன்ற காவலில் வைக்கச் சேலம் நீதித்துறை நடுவர் சிவா கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கொரோனா தொற்று பாதித்த அனைவரும் நிவாரணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படும் தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் துறையினர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 16 பேரையும் கைது செய்தனர் . பிறகு இவர்கள் இரண்டு போலீஸ் வேன்களில் போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன், 17 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.