சென்னை (17 ஏப் 2020): 30 நிமிடங்களில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் ரேப்பிட் கிட் இன்று சென்னை வந்தது.
தமிழகத்தில் கொரோனா கண்டறியும் சோதனை விரைவாக நடைபெறவில்லை என்றும், குறைந்த அளவிலான சோதனைகளே நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 4 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் (ரேபிட் கிட்) ஆர்டர் செய்யப்பட்டன எனத் தெரிவித்தார். இதனிடையே சீனாவின் குவாங்சோவில் நகரத்திலிருந்து 3 லட்சம் விரைவு பரிசோதனை உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தன. அவை பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்தது.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து 24, 000 விரைவு பரிசோதனை உபகரணங்கள் இன்று சென்னை வந்தடைந்தன. பிசிஆர் சோதனை மூலம் முடிவுகளை தெரிந்துகொள்ள 5 மணி நேரங்கள் வரை ஆகும் நிலையில், இந்த ரேபிட் கிட்கள் 30 நிமிடங்களில் முடிவுகளை அறிவிக்கின்றன.