தமிழக கர்நாடக பாஜக-வினர் இடையே நடைபெறும் உச்சபட்ச காமெடி!

Share this News:

பெங்களூரு (31 ஜூலை 2021): கர்நாடகா பாஜக திட்டத்தை தமிழக பாஜகவினர் எதிர்ப்பதும், மத்தியில் ஆளும் பாஜக அதை பார்த்து கொண்டிருப்பதும் பெரிய நகைச்சுவை என்று அரசியல் ஆர்வலர்கள் கிண்டல் அடிக்கின்றனர்.

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக் கொண்ட நிலையில், மேகதாது அணையை குறித்து சபதம் எடுத்துக் கொண்ட விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகா ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து, வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜகவின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, அண்ணாமலையின் பேச்சுக்கு விளக்கமளிக்கும் போது, கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

“காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமை உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எதிர்ப்பு குறித்து எந்தக் கவலையும் இல்லை. யாராவது உண்ணாவிரதம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை. மேலும், மேகதாது பற்றி அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல!” என்றும் அவர் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *