குடிகாரர்களின் கொண்டாட்டம் – பொதுமக்களுக்கு திண்டாட்டம்!

Share this News:

சென்னை (07 மே 2020): என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என நினைத்தபடியே டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே விபத்துக்களும் நடக்க தொடங்கியுள்ளன.

பலவித எதிர்ப்புகள் வந்தாலும் அரசு உறுதியாக இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடைகளை இன்று திறந்தது. ஆனால் எங்கும் சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பயந்தபடியே வன்முறைகளும், விபத்துக்களும் நடக்க ஆரம்பித்துள்ளன..

மதுரை அலங்கநல்லூரில் கணவன் குடித்துவிட்டு வந்தார் என்பதற்காக அதிர்ச்சி அடைந்த மனைவியும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. இப்போது ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் உள்ளனர்.

அதேபோல கோவை அருகே தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் வடவள்ளியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், தன்னுடைய நண்பர்கள் ஹரிஹரன், ஆண்டனி, நித்தின் ஆகியோருடன் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது.. பிறகு திரும்பவும் வீட்டிற்கு செல்லும்போது அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு காரில் சென்றுள்ளனர்.

ரஞ்சித் தான் காரை ஓட்டினார். காரிலேயே தண்ணி அடித்தார்களா அல்லது மது கிடைத்த உற்சாகமா என்று தெரியவில்லை.. காரை வேகமாக ஓட்டி உள்ளார் ரஞ்சித்.. புதுப்பாளையம் அருகே வரும் அந்த கார் டயர் மடார் என வெடித்தது.. ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து கார் தலைகீழாக நடுரோட்டிலேயே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.. எனினும் காரில் இருந்த இளைஞர்களுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை..

அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து வந்தனர்.. விபத்து குறித்து விசாரித்தும் வருகின்றனர். இதில், ரஞ்சித் தவிர மற்ற 3 பேரும் குடிபோதையில் இருந்தது தெரிந்தது.. காரில் நிறைய மதுபானங்கள் இருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

கொரோனா பரவல் அதி வேகத்தில் இருக்க,, பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கிடையே மதுக் கடைகள் திறக்கபட்டதால் குடிமக்களுக்கு கொண்டாட்டம்தான் ஆனால் பொதுமக்களுக்குத்தான் திண்டாட்டம்.


Share this News: