சித்தூர் (09 ஏப்ரல் 2020): கொரோனாவுக்கு டிக்டாக் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை பார்த்து கைவைத்தியம் மூலம் மருந்து சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனாவைப் பற்றியும், பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்த சிறிய கிராமமான அலப்பள்ளியில், ஊமத்தங்காயை அரைத்து அதில் கசாயம் வைத்துக் குடித்தால் கொரோனா பாதிக்காது என்று விஷமிகள் வெளியிட்ட விடியோவைப் பார்த்த இரண்டு குடும்பத்தினர், அதைப் பின்பற்றி கசாயம் வைத்துக் குடித்துள்ளனர்.
சுமார் 10 பேர் கொண்ட இரண்டு குடும்பத்தினர், டிக்டாக்கில் வந்த விடியோவைப் பார்த்து ஊமத்தங்காயை பறித்து வந்து கசாயம் வைத்துக் குடித்துள்ளனர். உடனே அனைவரும் மயங்கி விழ, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கொரோனா பாதிக்காத அவர்கள் கொரோனா பாதிக்காமல் இருக்க கசாயம் குடித்ததாக கூறியுள்ளனர். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வீட்டில் இருப்பது ஒன்றே கொரோனா தொற்றில் இருந்து காக்க உதவும். சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பவும் வேண்டாம், பிறருக்கு பகிரவும் வேண்டாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.