தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவு!

Share this News:

மதுரை (22 ஜன 2022): தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளி அருகே உள்ள விடுதியில் அறைகளை சுத்தம் செய்ய வார்டன் வற்புறுத்தியதால் மனஉளைச்சலில் இருந்த லாவண்யா கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து விட்டார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அவர் திருக்காட்டுப்பள்ளி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வார்டன் சகாயமேரி(62) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா கடந்த 19-ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கு மத்தியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையின்போது, லாவண்யாவிடம் எடுக்கப்பட்ட வீடியோவில் மதமாற்றம் செய்வது தொடர்பான சர்ச்சை தகவல்கள் வெளியானதால் பா.ஜ.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் லாவண்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில், எனது மகளை மதம் மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, அவரை திட்டி, அதிகமாக வேலைவாங்கியதால் மன உளைச்சளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிகிச்சையின்போது லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் மதமாற்றம் குறித்த தகவல் இல்லை. அதனால் முதல் தகவல் அறிக்கையில் மதமாற்றம் குறித்து குறிப்பிடப்படவில்லை.

தற்போது லாவண்யாவின் பெற்றோர் அளித்த 2-வது புகாரில் மதமாற்றம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தெரிவித்தார்.

நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மாணவி லாவண்யாவின் உடலை பெற பெற்றோர், உறவினர்கள் வருவார்கள் என போலீசார் காத்து இருந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் தான் உடலை வாங்கி கொள்வோம் என பெற்றோர் கூறியதுடன் உடலை பெற்றுச் செல்ல வரவில்லை. இதனால் பிரேத பரிசோதனை முடிந்து 2 நாட்கள் ஆகியும் உடலை ஒப்படைக்க முடியாமல் போலீசார் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இறந்த மாணவியின் தந்தை அளித்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இறந்த மாணவியின் பெற்றோர் காணொலி காட்சி வழியாக நீதிபதி முன்பு ஆஜராகி கண்ணீர் விட்டனர்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் விடுதி வளாகத்தில் இருந்த பூச்சி மருந்தை ஜன. 9-ம் தேதி குடித்துள்ளார். ஜன. 15-ல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் ஜன. 16-ல் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனில்லாமல் மாணவி ஜன. 19-ல் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சூழலில் மாணவி சிகிச்சையில் இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியுள்ளார். அதனால் சர்ச்சை எழுந்துள்ளது. மாணவியின் உடலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தடயவியல் மருந்து நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

மாணவி விஷம் குடித்து இறந்ததாக கூறுகின்றனர். பாலியல் தொல்லை அளித்ததாக எந்த சந்தேகமும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மாணவியின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டியதில்லை. மாணவியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்கு கொண்டுச் சென்று இறுதி சடங்குகளை செய்ய வேண்டும். மாணவியின் உடலை தஞ்சாவூரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுச் செல்ல தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் உரிய வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இறுதி சடங்கு விவகாரத்தில் போலீஸார் தலையிடக் கூடாது.மாணவியின் பெற்றோர் நாளை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட கவரில் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்த நபரை தொந்தரவு செய்யாமல், மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *