சென்னை (05 மே 2020): அறிகுறியின்றி கொரோனா பாதித்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகிறது.
இதனால் கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரும், அவர்களை கவனித்துக்கொள்வோரும் ZINC-20 mg, வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நிலவேம்பு, கபசுர குடிநீரையும் 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையில் 98% கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.