காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தமிழக வீரர் உட்பட மூவர் பலி!

Share this News:

ஸ்ரீநகர் (05 மே 2020): வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அஸ்வானி குமார் யாதவ், 31, சி.சந்திரசேகர், 31, சந்தோஷ்குமார் மிஸ்ரா,35 என உயிர் நீத்த மூவரும் சிஆர்பிஎப் -ன் 92 பட்டாலியனைச் சேர்ந்தவர்கள். .

இதில்,சி.சந்திரசேகர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே இருக்கும் மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சந்திரசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன . 2014ம் ஆண்டு பணியில் சேர்ந்த சந்திரசேகருக்கு மனைவியும் ஒன்றரை வயதில் ஆண்குழந்தையும் உள்ளது. உயிர்நீத்த மற்ற இரண்டு வீரர்கள் பீகார் மற்றும் உத்திர பிரேதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் சிறுவன் ஒருவன் பலியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடக்கி விடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்காக துருப்புக்களும் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா காஜியாபாத் பகுதியில் அமைந்திருக்கும் கூட்டு சோதனைச் சாவடியில் சட்டம் ஒழுங்கு கடமையில் ஈடுபட்டவர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சிஆர்பிஎஃப் சிறப்பு டிஜி (ஜே & கே மண்டலம்) சுல்பிகர் ஹசன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து தீவிரவாதிகள் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படும் செய்தியை சிஆர்பிஎஃப் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஹசன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இதே பிராந்தியத்தில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News: