சென்னை (20 ஜூன் 2021): நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் , வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார்.
எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால், தயாரான மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரம் திமுக அரசு அமைத்து குறுகிய காலத்திற்குள் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேர்வு ரத்து அறிவிப்பு வராவிட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தேர்வுக்கு தயாராவது தவறில்லை என்று தெரிவித்தார். இதன்முலம் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவில்லாத நிலையில் உள்ளது.