சென்னை (02 மே 2020): கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் மக்கள் அதனை சரிவர பின்பற்றுவதில்லை என்பதால் காவல்துறை மேலும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 161 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 6 நாட்களில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டை தொடர்ந்து, கரூர் மாவட்டமும் கொரோனா இல்லாத மாவட்டமானது. சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனாவுக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்க, தமிழ்நாடு திட்டமிட்டிருக்கிறது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில், சிறப்பு குழு ஒன்றை நியமித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாகத்தான் தளர்த்த முடியுமென, மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மே 3-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில், மக்களிடையே குழப்பம் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை அனைத்து பள்ளிகளையும், தங்களிடம் ஒப்படைக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.