சென்னை (02 மே 2020): சென்னையில் இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 203 தொற்றுகளில் 176 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1082 நபர்களில், 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 219-ஆக உயர்ந்துள்ளது
சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க நகர் மண்டலத்தில் 48 நபரும், தண்டையார்பேட்டையில் 24 நபரும், வளசரவாக்கத்தில் 20 நபரும், கோடம்பாக்கத்தில் 19 நபரும், ராயபுரத்தில் 17 பேரும், அண்ணாநகரில் 6 பேரும், அமபத்தூரில் 6 நபரும், திருவொற்றியூரில் 3 நபரும், மணலி, அடையாறில் தலா ஒருவரும் பாதித்து உள்ளனர்.
சென்னையில் தொற்று அதிகரிக்க காரணமாக அதிகாரிகள் தெரிவிக்கையில், குறுகிய பரப்பளவில் அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 25000 – 50000 க்கும் மேல் வசிப்பதால் சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் சிங்க் மற்றும் விட்டமின் சி மாத்திரைகள், கபசுரக் குடிநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி, சமூக இடைவெளிகளை முறையாக கடைபிடிக்காமால் இயங்கும் வங்கி அலுவலகங்கள், ஏடிஎம் மையங்கள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்படும்.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் பூ மற்றும் பழக்கடைகள் இடமாற்றம் செய்வது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.