லக்னோ (16 ஜூன் 2021): காசியாபாத்தின் லோனியில் வயதான முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
உள்ளூர் போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்படி , வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் காசியாப்பாத்தில் அப்துல் சதாம் என்ற முதியவர் தொழுகை செய்வதற்கு சென்ற போது, அவரை வழிமறித்து கடத்திய கும்பல் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்கி உள்ளது. முதியவரை ஜெய்ஸ்ரீராம், வந்தே மாதரம் என்று கூறும்படி கொடூரமாக தாக்கிய அந்த கும்பல், முதியவரின் தாடியினையும் கத்திரி கோளால் நறுக்கியுள்ளனர்.
இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள ஒருவர், அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.முதியவர் தாக்கப்படும் வீடியோ வேகமாக பரவுவதை அடுத்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து காசியாபாத் போலீசார் பிரவேஷ் குஜ்ஜார் என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே உண்மையைச் சரிபார்க்காமல், ட்விட்டரில் இந்த சம்பவத்திற்கு வகுப்புவாத வண்ணம் கொடுக்கத் தொடங்கியதாக , தி வயர், ராணா அய்யூப், முகமது ஜுபைர், டாக்டர் ஷாமா முகமது, சபா நக்வி, மஸ்கூர் உஸ்மானி, ஸ்லாமன் நிஜாமி திடீரென்று அவர்கள் அமைதியை சீர்குலைப்பதற்கும் மத சமூகங்களிடையே வேறுபாடுகளைக் கொண்டுவருவதற்கும் செய்திகளைப் பரப்பத் தொடங்கினர் ”என்று காஜியாபாத் காவல்துறை தங்கள் வழக்கு பதிவு செய்துள்ளது.