வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை குறுஞ்செய்திகள், சாதாரண குறுஞ்செய்திகளை விட அதிகம் ‘Forward’ செய்யப்படுவதாகவும் தெரியவந்திருக்கிறது. முக்கியமாக இஸ்லாம் மற்றும் இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பை, பயத்தை விதைப்பது போலவே பெரும்பாலான Fear Speech குறுஞ்செய்திகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குழுக்களில் இருக்கும் 10 சதவிகித பயனர்கள் மட்டுமே இதுபோன்ற இஸ்லாமோஃபோபியா குறுஞ்செய்திகளை அனுப்புவதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இவர்களின் முக்கிய நோக்கமே இஸ்லாம் மக்கள் மீதான வெறுப்பையும், பயத்தையும் அதிகரிப்பது மட்டுமே. மற்ற தளங்களை விட வாட்ஸ்அப்பே இதுபோன்ற பரப்புரைகளுக்கான முக்கியத் தளமாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்கள் ‘Content Moderation’ மூலம் வடிகட்டப்பட்டு விடும். ஆனால், வாட்ஸ்அப்பில் அது போன்ற செயல்முறைகள் எதுவும் கிடையாது என்பதால், ஒருவர் பகிரும் தகவல் எந்த மாற்றமும் தடையும் இன்றி சென்றடைகிறது. எனவேதான் இது போன்ற பரப்புரைகளுக்கு வாட்ஸ்அப் முக்கியத் தளமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
நன்றி: விகடன்