சென்னை (08 மார்ச் 2020): திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியாருக்கு கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக உள்ளது. கட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் அதிகாரம் கொண்ட பதவியாகும்.
1977-ம் ஆண்டில் இருந்து பொதுச்செயலாளராக க.அன்பழகன் இருந்து வந்தார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு அந்த பதவியில் அவர் நீடித்து வந்தார்.
அவர் காலமானதை அடுத்து அடுத்த மூத்த தலைவருக்கே இந்த வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த உறுப்பினராக உள்ள பொருளாளர் துரை முருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும் தி.மு.க.வில் தற்போது கிளை கழக உள்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. அன்பழகன் இறந்ததால் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் நடை பெறும்போது அனைத்து பதவிகளையும் நிரப்பி, பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தப்படுமா? அல்லது அதற்கு முன்பே அறிவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் முழுவதும் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வசம் உள்ளது. இதனால் கட்சி ரீதியான பணிகள் எதுவும் பாதிக்க வாய்ப்பு இல்லை.