சென்னை (31 மே 2020): “என்னிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் கிடைத்தது” என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய யுவன் சங்கர் ராஜா 2016 ஆம் ஆண்டு ஷப்ருன் நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவனின் மனைவி ஷப்ருன் நிஷா இன்ஸ்டாகிராமில் பலரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சிலர் யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை விமர்சித்தனர். அவர் ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? என்ற கேள்விக்கு அவரே பதிலளிப்பார் என்றார் ஷப்ருன் நிஷா. அப்போது இஸ்லாம் குறித்து யுவன் அளித்த பதில்:
“இஸ்லாத்தில் எனக்கு பிடித்ததே அங்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. நாம் தொழுகைக்கு செல்லும்போது எனது அருகில் யார் வேண்டுமானாலும் நின்று தொழலாம். என் முன்னே யார் நிற்க வேண்டும் என்றோ என் பின்னே யார் நிற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லை. மொத்தத்தில் யார் உயர்ந்தவர் என்ற பாகுபாடு இல்லை.” என்றார்.
“மேலும் எனது பல கேள்விகளுக்கு குர்ஆனில் பதில் கிடைத்தது. ஒரு வீட்டுக்கு, ஒரு நாட்டுக்கு ஒரு தலைவன் இருப்பதுபோல் உலகுக்கே ஒரு தலைவன் இருக்கிறான் என்ற பதில் கிடைத்தது. இவை எனது மனதில் ஆழமாக பதிந்தது” என்றார்.