முஸ்லிம்களின் தொப்பி அணிந்து சிஏஏ போராட்டத்தில் கலந்து கொண்ட சுவாமி அக்னிவேஷ்!

Share this News:

கண்ணூர் (18 பிப் 2020): கேரளாவில் சிஏஏ பேரணியில் முஸ்லிம்களின் தொப்பி அணிந்து கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் சுவாமி அக்னிவேஷ்.

மதரீதியில் பிளவை ஏற்படுத்தும் இந்தியாவின் குடியுரிமை திரருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக்காக மாறிக் கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வெள்ளியன்று கேரளாவின் கண்ணூரில் “அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்” என்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில், ஹரியானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆரிய சமாஜ் அறிஞருமான சுவாமி அக்னிவேஷ் பங்கேற்று மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மதச்சார்பின்மையை போற்றும் கேரளாவின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கே சிறந்த உதாரணம் எனக் குறிப்பிட்டார். மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக கேரள அரசுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

உடுத்தியிருக்கும் உடையை வைத்து வன்முறை பரப்புவோரை அடையாளம் காணலாம் என பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தலைப்பாகையை முஸ்லிம் லீக் தலைவர் மெளலவிக்கு அணிவித்து, அவருடைய தொப்பியை வாங்கி சுவாமி அக்னிவேஷ் அணிந்துகொண்டு பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும், தொப்பி அணிவதால் நான் முஸ்லிமாகவோ, தலைப்பாகை அணிவதால் அவர் இந்துவாகவோ மாறிவிடப் போவதில்லை. இதில் யார் வன்முறை செய்கிறார் என்பதை நீங்களே நிரூபியுங்கள் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் உடையை வைத்தே யார் கலவரக்காரர்கள் என்பதை அடையாளம் காணலாம் என்று பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/kalaignarnewsofficial/videos/1176279726037556/


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *