கொடூரர்கள் இருக்கும் கட்சியில் இனி நான் இருக்கப்போவதில்லை – பிரபல நடிகை பாஜகவிலிருந்து விலகல்!

Share this News:

புதுடெல்லி (29 பிப் 2020): கொடூர சிந்தனை கொண்ட கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியுள்ளார் மேற்கு வங்க நடிகையும் அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி.

இவர் மேற்குவங்கத்தில் புகழ்பெற்ற டிவி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். பல்வேறு சீரியல்கள், விளம்பரங்கள் என நடித்து வந்த சுபத்ரா 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இந்நிலையில்தான் பா.ஜ.க-வின் போக்கு தற்போது மாறிவிட்டது எனக் காரணம் கூறி, அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இது பற்றிப் பேசியுள்ள அவர், “பா.ஜ.க-வின் செயல்முறை மற்றும் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 2013-ம் ஆண்டு அந்தக் கட்சியில் சேர்ந்தேன். ஆனால், சமீபகாலமாகக் கட்சி அதன் பாதையில் செல்லவில்லை என்பதைக் கவனித்து வருகிறேன். மக்களை மதத்தால் தீர்மானிப்பதும் வெறுப்பு உணர்வை உருவாக்குவதுமே பா.ஜ.க-வின் சித்தாந்தமாக மாறிவருவதாக உணர்கிறேன்.

பலநாள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துவிட்டேன். டெல்லியில் என்ன நடந்தது என்று பாருங்கள். நிறைய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கலவரம் மக்களைப் பிளவுபடுத்துகிறது.

பா.ஜ.க-வைச் சேர்ந்த அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா ஆகியோர் வெறுக்கத்தக்க கருத்துகளைக் கூறியுள்ளனர். இருந்தும் தற்போது வரை அவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. கலவரத்தின் காட்சிகள் என்னை முற்றிலும் உலுக்கியுள்ளன.

மோசமாகப் பேசிய தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கட்சியில் நான் இருக்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். அவர்கள் இருக்கும் கட்சியில் நான் இருக்க மாட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே மேற்குவங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷுக்கு அனுப்பி வைத்துவிட்டேன். நான் நேரில் சென்றும் என் ராஜினாமா முடிவை அவருக்குத் தெரியப்படுத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *