நிர்பயா குற்றவாளிகள் நால்வரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது!

Share this News:

புதுடெல்லி (20 மார்ச் 2020): நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனையும் இன்று காலை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. அவர்களை தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை அதற்கான சிறை ஊழியர் கடந்த புதன்கிழமை காலை நடத்தினார். இந்நிலையில், நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

முன்னதாக, மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் பல முயற்சிகள் எடுத்தனர். எனினும் நீதி மன்றம் அவர்களது மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *