உலகக் கோப்பை – கத்தாரில் கண்ணியமாக நடத்தப்பட்டேன் – மேற்கத்திய பெண்ணின் நேர்காணல்!

Share this News:

கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது அனைவரும் அறிந்த சங்கதி.

தற்போது போட்டி முடிவடைந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய ரசிகர்கள், உள்ளூர் ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்கள், வெறுப்பை பரப்பிய ஊடகங்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டிருக்கின்றன.

“என் போன்ற இளம் பெண்களுக்கு கத்தர் ஓர் ஆபத்தான இடம் என எண்ணி மிகவும் பயந்திருந்தேன். மது இல்லாத காரணத்தால், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி, ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன்.”

இங்கிலாந்து நாட்டிலிருந்து தன் தந்தையுடன் பயணித்து விளையாட்டைக் கண்டுகளித்த 19 வயதான பெண் விசிறி எல்லீ மொலொஸன், Reuters க்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்புக்காக என் தந்தை என்னுடன் பயணித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை எனும் அளவிற்கு கத்தரில் நான் கண்ணியமாக நடத்தப்பட்டேன்” என்றார்.

“பொதுவாக இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கால்பந்தாட்டப் போட்டிகளில் பெண் ரசிகைகள் மீதான வன்முறையும், பாலியல் துன்புறுத்தல்களும் இருக்கும். ஆனால், கத்தரில் அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவுமே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் மது தடை செய்யப்பட்டது தான் என கருதுகிறேன்!” என்றும் கூறியுள்ளார்.

அதே போல், அர்ஜென்ட்டினாவிலிருந்து கத்தர் வந்த 21 வயது பெண் விசிறியான ஏரியானா கோல்டு, ஊடகங்களுக்கு இவ்வாறு நேர்காணல் அளித்துள்ளார்.

“கத்தர் நாடு பெண்களுக்கு இவ்வளவு பாதுகாப்பானது என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. என் நாட்டில் கத்தர் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், கத்தர் வந்தபின்னர் நேரில் நான் கண்டவற்றிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் கண்டேன். இங்கே நான் மிகவும் சுதந்திரமாக உணர்ந்தேன்.”

இன்னொரு பெண் ரசிகையான எம்மா ஸ்மித், இங்கிலாந்தின் ஷெஃபீல்டு நகரத்தில் இருந்து வந்து, நாடு திரும்பியுள்ளவர். இவர், “கத்தர் அரசு அரங்கங்களில் மதுவைத் தடை செய்திருப்பதால், யாருக்கும் எவ்வித குறையும் இருப்பதாக உணரவில்லை. நிஜத்தைச் சொல்வதானால், கத்தரின் மது தடையால் நான் மிக அமைதியான, அழகான சூழலைக் கண்டேன்.”

எனில், கத்தரில் மதுவே கிடைப்பதில்லையா எனக் கேட்டு உரிமைப் போராளிகள் கேட்டை ஆட்ட வேண்டாம். கைக்கெட்டும் தொலைவில் எளிதாகக் கிடைப்பதற்கும், பல்வேறு ஒழுக்க விதிமுறைகளில் ஒப்பமிட்டு, சிரமப்பட்டு கிடைப்பதற்கும் வித்தியாசம் உண்டு.

FIFA World Cup சரித்திரத்தில் இதுவரை இல்லாத – இந்த முதல் முறை மதுத் தடையை நீக்க பல்வேறு நாடுகளால் கத்தர் எதிர்கொண்ட அழுத்தங்கள், வார்த்தைகளால் சொல்லி மாளாது.

உண்மையான அழைப்புப்பணி என்பது, சொல்லில் மட்டுமல்ல… செயலில் காண்பிப்பதே! என்ற இறைத்தூதரின் வாழ்வை அழுத்தமாக நிரூபித்திருக்கும் கத்தருக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!

– முஹம்மது சர்தார், கத்தரிலிருந்து


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *