1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற நாளின் நினைவு தினம் இன்று.
விஜய் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும் இன்றைய தினம், இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் தைரியத்தை குறிக்கிறது. 51 ஆண்டுகளுக்கு முன், இந்தப் போரின் வெற்றி, பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தின் பிறப்பையும் குறிக்கிறது.
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கிழக்கு பகுதியில் தொடங்கிய மனித உரிமை இயக்கம் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் போருக்கு வழிவகுத்தது.
ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா தலைமையிலான இந்திய படைகள் பாகிஸ்தானை எதிர்கொண்டன. இந்தியாவின் வலிமைக்குப் பின்னால் பாகிஸ்தானால் நீண்ட காலம் நிற்க முடியவில்லை.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாசி மற்றும் 93,000 வீரர்கள் இந்திய படைகளிடம் சரணடைந்தனர். 13 நாட்களில் பாகிஸ்தான் சரணடைந்தது.
1971 டிசம்பர் 3 அன்று 11 இந்திய விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்கியபோது போர் தொடங்கியது. இந்தியாவின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைகள் இணைந்து பாகிஸ்தானை எதிர்கொண்டன.
போரில், இந்தியப் படைகள் மேற்கு பாகிஸ்தானில் 15,010 கிமீ நிலப்பரப்பைக் கைப்பற்றின.1971 டிசம்பர் 3 முதல் 16 டிசம்பர் 1971 அன்று வரை போர் நீடித்தது. அன்று பங்களாதேஷ் என்ற நாடும் உருவாகியது.
டாக்கா இப்போது சுதந்திர தேசத்தின் சுதந்திர தலைநகரம்’ என்று 16 டிசம்பர் 1971 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் திருமதி இந்திரா காந்தி அறிவித்தார்.
வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16ஆம் தேதி இந்திய ராணுவத்தின் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.