பர்மா குடியிரிமை: அதன் பிறகு பர்மாவில் 1982ம் ஆண்டு பர்மா சிட்டிசன்ஷிப் எனும் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். ஏற்கனவே ஆபரேஷன் டிராகன் கிங் என்ற சட்டத்தின் மூலமாக ஜண்டாவினரால் தனிமைப்படுத்தப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்கள் பர்மா சிட்டிசன்ஷிப் என்ற சட்டத்தின் மூலமாக குடியுரிமையை முழுவதுமாக பறி கொடுத்தார்கள். அவ்வாறு சொல்வதை விட, ஜண்டாக்கார கொடூரர்கள் பறித்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதன் மூலம் ரோஹிங்கியாக்கள் அல்லாத மற்றவர்களுக்கு தேசிய பதிவு அட்டை என்ற அடையாள அட்டையும் (NRC – NATIONAL REGISTRATION CARD) ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு வெளிநாட்டினருக்கான பதிவு அட்டையும் (FRC – FOREIGN REGISTRATION CARD) வழங்கப்பட்டன.
இந்த சட்டத்தின் மூலமாக ரோஹிங்கிய முஸ்லிம்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகள் கூட கண்காணிக்கப்பட்டன என்று தெற்காசிய நாடுகள் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கே சார்னே என்பவர் தெரிவிக்கிறார்..
தற்போது இந்தியாவில் இது போன்றதொரு சட்டமான என்ஆர்சி (NRC) எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் சட்டத்தை இந்துத்துவ சித்தாந்தம் கொண்ட பாஜகவினர் கொண்டுவரத் துடிக்கின்றனர்.
ஏற்கனவே அசாமில் என்ஆர்சி சட்டத்தின் மூலமாக 19 இலட்சம் மக்கள் தங்கள் குடியுரிமையைப் பறி கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்திற்கே இந்த நிலைமை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் எத்தனை இலட்சம் பேர் தங்களுடைய குடியுரிமையைப் பறி கொடுப்பார்கள் என்பதனை இப்போதே சொல்ல இயலாது.
இதில் முன்னாள் இராணுவ வீரரான ஸனாவுல்லாஹ் என்பவரின் பெயர் என்ஆர்சியில் விடுபட்டிருக்கிறது. நாட்டிற்காக உயிரைக் கொடுக்க முன் வந்தவர்கள் என்ஆர்சியில் விடுபட்டிருப்பது அதன் ஆபத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
இதில் ஆகக் கொடுமை எதுவென்றால், முன்னால் குடியரசுத்தலைவராக இருந்த ஃபக்ருத்தீன் அலி அகமது அவர்களின் குடும்பத்தில் சிலருடையை பெயர்களும் என்ஆர்சி பட்டியலில் இல்லை என்பதால், அவர்களும் அகதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படுபவர் குடியரசுத்தலைவர். அப்படிப்பட்ட குடியரசுத்தலைவர் பதவியை வகித்தவரின் குடும்பத்தில் சிலருடைய குடியுரிமையே பறிக்கப்பட்டிருக்கிறதென்றால் சாதாரண மக்களின் நிலையை என்னவென்று சொல்வது?
ஆபத்தான இத்தகைய அடுத்த ஒப்பீட்டை நாளை காண்போம்!
பகுதி-1 பகுதி-2 பகுதி-4 பகுதி-5