பணம் வந்த கதை – பகுதி 10: ரகசிய வித்தை

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

ன்னை நாடி வந்த பிற ஊர் பொற்கொல்லர்களை அய்யாவு கனிவாக வரவேற்றார்.

அவர்கள் வருவார்கள் என்பதை அவர் எதிர்பார்த்தார் என்றுகூடச் சொல்லலாம். உள்ளூரில் அமோகமாக நடந்துக் கொண்டிருந்த தம் தொழிலை வெளியூர்களிலும் கிளை பரப்ப அவர் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.

அந்தந்த ஊர்களில் உள்ள பொற்கொல்லர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அய்யாவுவால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அவர்களிடம் தானே வலியச் செல்வதைவிட அவர்களே தம்மை நாடி வந்தால் நன்றாக இருக்கும் என்பதும் அய்யாவுவின் எதிர்பார்ப்பு. பழம் கனிந்து பாலில் விழுந்தது.

பொற்கொல்லர்கள் அய்யாவுவை நாடி வந்த நோக்கம் அதுதான். ‘நாமெல்லாம் ஒரே தொழிலில் உள்ளவர்கள். எங்கள் ஊர்க்காரர்கள் எங்களை உங்களுடன் ஒப்பிட்டு பேசும் அலட்சியப் பேச்சுகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை. உங்களுக்குத் தெரிந்த அந்த ‘ரகசிய வித்தை’யை எங்களுக்கும் கற்றுக் கொடுத்தால் நாங்களும் பிழைத்துக் கொள்வோம்.’ வந்த விஷயத்தை ‘பட்’டென்று போட்டு உடைத்தார்கள் அவர்கள்.

“வித்தையெல்லாம் ஒன்றுமில்லை. மக்களுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிந்து அந்தப் பொருளை அல்லது சேவையை நேர்த்தியாக வழங்குவதில் இருக்கிறது சூட்சுமம். எனக்குத் தெரிந்ததை உங்களுக்கும் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணை ஒன்றுமில்லை. ஆனால் ஒரு முக்கியமான நிபந்தனை உண்டு”

“அது என்ன நிபந்தனை?”

“நான் சொல்லித்தரும் விஷயங்கள் பரம ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் நம் தொழிலில் சம்பந்தப்படாத யாருக்கும் இந்த விஷயங்கள் தெரிந்துவிடக் கூடாது. அப்படி தெரிய வந்தால் நம் தொழில் முழுவதுமே தவிடுபொடியாகி விடும்.”

அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

அக்கணமே அவர்களுக்குள் ஒரு ரகசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அக்கூட்டணியின் தலைமைப் பொறுப்பு அய்யாவுவிடமே இருக்கும். அய்யாவுவின் திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் உறுப்பினர்கள் கேள்வியேதுமின்றி ஆதரவு அளிக்க வேண்டும்.

அய்யாவு தங்க நாணயங்கள் வெளியிடுவது, அதன் பாதுகாப்பு, சேவைக் கட்டணம், துண்டுச் சீட்டு என தமது ‘தொழில் ரகசியங்கள்’ அனைத்தையும் தமது புதிய சகாக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஒவ்வொரு உறுப்பினரும் அவர்களின் இரும்புப் பெட்டகங்களில் வைத்து பாதுகாப்பதற்காக பொதுமக்கள் தரும் தங்க நாணயங்களில் 10 சதவீதத்தை அய்யாவுவிடம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

அய்யாவுவிடம் பாடம் கற்றுக் கொண்டவர்கள் தத்தம் ஊர்களுக்குத் திரும்பிச் சென்று அவர் சொல்லிக் கொடுத்தபடி தொழில் நடத்த ஆரம்பித்தனர். அய்யாவுவின் ‘துண்டுச் சீட்டை’ மக்கள் தங்கத்திற்கு நிகரானதாக மதித்ததைப் போலவே மற்ற பொற்கொல்லர்களின் துண்டுச் சீட்டுகளையும் மக்கள் மதித்துத் தங்கள் கொடுக்கல் வாங்கலில் புழங்க ஆரம்பித்தனர்.

சில வியாபாரிகள் இன்னொருவருக்குப் பணம் கொடுக்க வேண்டியிருந்தால் ஒரு துண்டுக்கடிதத்தில் ‘இன்னாருக்கு இவ்வளவு தொகை கொடுக்கவும்’ என்று அய்யாவுக்கு வேண்டுகோள் அனுப்ப ஆரம்பித்தனர். அய்யாவு அந்தத் தொகையை தனது பேரேட்டுப் புத்தகத்தில் பணம் கொடுப்பவரின் கணக்கிலிருந்து கழித்துக் கொண்டு பெறுபவரின் கணக்கில் சேர்த்து விடுவார். இதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. இந்த ‘வேண்டுகோள் கடித’ நடைமுறை மிகவும் பிரபலமாகி விட்டது. மக்கள் இந்தக் கடிதத்தை ‘காசோலை’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

ஒரு நாள் நள்ளிரவில் நடந்த ‘பொற்கொல்லர்கள் கூட்டத்தில்’ அய்யாவு புதிய திட்டம் ஒன்றை விளக்கினார். கூட்டணி தர்மப்படி அவரது சகாக்கள் தலையசைத்து அதை ஆமோதித்தனர். அடுத்த நாள் அய்யாவு உள்ளிட்ட பொற்கொல்லர்களின் குழு ஒன்று அந்த வட்டார நிர்வாகச் சபைத் தலைவர்களை சந்தித்துப் பேசுவதென கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் அய்யாவு பேச ஆரம்பித்தார்.

“பொற்காசுகளை எங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு அதற்குப் பிரதியாக நாங்கள் கொடுக்கும் துண்டுச் சீட்டு மிகவும் பிரபலமாக புழக்கத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நிர்வாகச் சபையின் வரவு செலவுகளுக்குக் கூட எங்கள் துண்டுச் சீட்டுகள் பயன் படுத்தப் படுகின்றன”.

“உண்மைதான்.. அதுக்கு என்ன இப்போ?”

“அதுல ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டிருக்கு.” என்று தொடர்ந்தார் அய்யாவு. “யாரோ சிலர் எங்கள் துண்டுச் சீட்டுகளைப் போலவே ‘கள்ளச் சீட்டு’களை தயாரித்து புழக்கத்தில் விட்டிருக்கின்றனர்”

தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். “அப்படியா? அது தப்பாச்சே? அதை எப்படி தடுக்கலாம்?”

“எனக்குத் தெரிந்து இதைத் தடுக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது” என்றார் அய்யாவு.

தொடரும்

– சலாஹுத்தீன் பஷீர்

பணம் வந்த கதை – பகுதி 9: திட்டத்தின் அடுத்த கட்டம்!


Share this News: