குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டப் பாதையிலிருந்து தடம் மாறுகிறதா திமுக?

Share this News:

CAA NRC விசயத்தில் தி.மு.க.வின் சமீபத்திய நகர்வுகள், அந்தக் கட்சி எந்த திசையை நோக்கி நகர்கிறது என்கிற கேள்வியை எழுப்ப வைக்கிறது.

ஹலோ எஃப்.எம்.மில் துரைமுருகன் வெளிப்படுத்திய கருத்து; சட்டசபையில் “இந்திய முஸ்லிம்களுக்கு சி.ஏ.ஏ. சட்டத்தால் பாதிப்பில்லை” என்று சொல்லியது; காங்கிரஸ் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எதிர்ப்பதிலிருந்து, தி.மு.க. விலகிச் செல்வதைக் காண முடிகிறது.

தந்தைப் பெரியாரோடு களம் கண்டு, தனது சமூகநீதிச் செயல்பாடுகளால் சமத்துவப் பெரியார் என அழைக்கப்பட்ட கலைஞரே 1999இல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார் என்கிறபோது, இன்றைய தி.மு.க.வின் நகர்வுகளைக் கண்டு வியப்படைய ஒன்றுமில்லைதான். இருப்பினும் “கடந்த காலத் தவறுகளிலிருந்து தி.மு.க.வை மீட்டெடுக்க விரும்புகிறேன்” என்றும்; “நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்குப் பாடம் புகட்டுவோம்” எனவும் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்திய வார்த்தைகள் இவ்வளவு சீக்கிரத்தில் சறுக்குகின்றன என்பதுதான் வேதனையானது.

ஆரியவாதத்தைத் தமிழகத்தில் முடக்கிப்போட்ட கட்சியாகவும், மாநில சுயாட்சியை நிலைநிறுத்திய கட்சியாகவும், சிறுபான்மைச் சமூகங்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்திய கட்சியாகவும் தி.மு.க. இருக்கவே செய்திருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ; அதேயளவு உண்மையானது மேற்சொன்ன அனைத்து நிலைப்பாடுகளிலும் அது பின்வாங்கவும் செய்திருக்கிறது என்பதாகும்.

எனினும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரும் நம்பிக்கையைப் பெற்றது என்பதும், அது 39 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது என்பதும், மத்தியில் ஆளுகின்ற பா.ஜ.க. அரசிற்கு எதிராகத் தி.மு.க. நின்றது என்கிற அடிப்படையில்தான். கம்யூனிஸ்ட் கட்சிகளும், வி.சி.க.வும், முஸ்லிம் கட்சிகளும் தங்களின் பின்னால் அணிதிரள்வதும் அதே அடிப்படையில்தான் என்பதை தி.மு.க.வின் தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“பாசிச பா.ஜ.க.வை எதிர்ப்பது” என்பது வெறுமனே தேர்தல் நிலைப்பாட்டோடு முடிந்துபோகிற ஒன்றல்ல. #CAA_NRC சட்டங்களை எதிர்த்து ஒரே ஒரு பேரணி சென்றுவிட்டதோடு கடமை முடிந்துவிடாது. உள்ளாட்சித் தேர்தல் முரண்பாட்டைப் பிராதானப்படுத்தி, இந்திய நாட்டின் அரசியலமைப்பைக் காவு வாங்கும் பா.ஜ.க.விற்கு எதிரான “எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில்” பின்வாங்குவது உங்களின் “கொள்கையை கேள்விக்குப்படுத்தும்” என்பதையெல்லாம் தி.மு.க.வினர் “மனசாட்சியோடு” அணுகவேண்டும். மாறாக “நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டுப் போட்டீர்களா? தி.மு.க.வில் உறுப்பினரா? எடப்பாடி அரசை விட்டுவிட்டு எதிர்க்கட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள்” போன்ற அபத்தமான கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருக்காதீர்கள்.

தி.மு.க. இந்திய மாநிலக் கட்சிகளில் தனித்துவமும் வலிமையும் பொருந்திய கட்சி. அதை பா.ஜ.க. பாக்கெட் செய்வதை அல்லது பா.ஜ.க.விற்கு அது பாக்கெட் ஆவதை, அபத்தமான கேள்விகளால் அங்கீகரித்துக் கொண்டிருக்காதீர்கள். அது உங்களை நம்பி நிற்கும் சிறுபான்மையினரின் குருதியைக் குடித்துவிடும். பின்னர் அதன் கரங்கள், அடுத்த சமூகத்தை சவக்குழிக்குள் தள்ளும். பிற கட்சிகளை செல்லரிக்க வைக்கும். தமிழ்நாட்டை தங்களது கொள்கைப் பிராந்தியத்தில் ஒன்றாக்கிவிடும். சுருங்கச் சொன்னால் அது “நம் எல்லோரையும்” தாக்கிக் கொல்லும்.

நன்றி: பழனி ஷஹான்


Share this News:

Leave a Reply