சென்னை (10 பிப் 2020): நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்துக்கே சென்ற வருமான வரித்துறையினர் நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, விஜய்யை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர். இதன்பிறகு, விஜய் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பியதையடுத்து நெய்வேலியில் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அவரது ரசிகர்கள் கூடினர். இதனிடையே, விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் லேசான தடியடியும் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது அவ்வப்போது ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து வந்த நடிகர் விஜய் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) படப்பிடிப்பு வேன் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி முதலில் கையசைத்தார். இதன்பிறகு, தன்னுடைய செல்போனை எடுத்து ரசிகர்களுடன் அவர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த விடியோ நேற்று முழுவதும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.