மும்பை (29 ஏப் 2020): பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் (54) மும்பையில் புதன்கிழமை காலமானார்.
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
இர்ஃபான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்தார். இதனால் சிகிச்சைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார். கடந்த ஓராண்டாக திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
கடந்த வாரம் இர்ஃபான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். லாக்டவுன் காரணமாக தாயின் இறுதிச்சடங்கில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் காலமானார்.