புதுடெல்லி (29 ஏப் 2020): கொரோனா வைரசைக் கண்டறிய சீனாவிடமிருந்து வாங்கப்பட்ட Rapid Test சாதனங்கள் துல்லியமாக செயல்படவில்லை என்றும், முரண்பாடான முடிவுகளைக் காட்டுவதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ICMR தெரிவித்துள்ளது. இந்தக் கருவிகளை உடனடியாக சீனாவுக்கு திருப்பி அனுப்புமாறும் அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், வைரஸ் நோயை விரைவாகக் கண்டறிய Rapid Test Kit சாதனங்கள் சீனாவிடமிருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டன. இந்த மருத்துவ சாதனங்களில் பெருமளவில் பழுதுகள் இருப்பதும், சோதனை முடிவுகள் முரண்பாடாக வெளியாவதும் உடனடியாக சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் – ICMR-யிடம் பல மாநில அரசுகள் புகார் தெரிவித்ததை அடுத்து, இந்தக் கருவிகளை அடுத்த சில தினங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என ICMR அறிவுறுத்தியது.
சீன Rapid Test கருவிகள் பயன்படுத்தப்படுவது பற்றியும், சோதனை முடிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள பல்வேறு இடங்களுக்கும் ICMR மருத்துவ நிபுணர் குழுக்கள் நேரில் சென்றன. சீன மருத்துவ சாதனங்கள் துல்லியமாக செயல்படாததும், தவறான பரிசோதனை முடிவுகளைக் காட்டுவதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சீனாவின் Guangzhou Wondfo மற்றும் Zhuhai Livzon 2 நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பிய கொரோனா வைரஸ் Rapid Test Kit சாதனங்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அனைத்து சாதனங்களையும் சீனாவுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு ICMR அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா வைரசைக் கண்டறிய, முதலில் பயன்படுத்தப்பட்ட PCR கருவிகள்தான் ஏற்றவை என்றும், வைரஸ் தொற்று குறித்து உடனடியாக கண்டறிய முடியும் என்பதால், PCR சாதனங்களையே தொடர்ந்து பயன்படுத்துமாறும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை ICMR கேட்டுக் கொண்டுள்ளது.