லண்டன் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீனா செல்லும் பெரும்பாலான நாடுகளின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்–்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 132ஐ எட்டியது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், சீனாவுக்கான விமான சேவையை உலக நாடுகள் ரத்து செய்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தீவிர நிலையை எட்டி உள்ளது. நேற்று இந்த வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி மேலும் 25 பேர் பலியாயினர். இதன் மூலம், பலியானோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1,459 நோயாளிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாகவும், வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 5,974 ஆக அதிகரித்து உள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், 1,239 நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் சீனா செல்லும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனமும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், பிரிட்டனில் இருந்து சீனா செல்லும் நேரடி விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பயணிகளின் அசவுகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு தான் எப்போதும் முக்கியம். சீனா செல்லும் அல்லது சீனாவிலிருந்து பிரிட்டன் வரும் பயணிகள், இனி வரும் நாட்களில் விமான இயக்கம் குறித்த தகவல்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதே சமயம் அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் விமானங்களை இயக்க பிரிட்டன் அரசு விமான நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீனாவை விட்டு வெளியேறி வருவதால், அவர்கள் தாய்நாடு செல்வதற்காக அத்தியாவசிய தேவைக்கு மட்டும் விமானத்தை இயக்க பிரிட்டன் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.