ஈரோடு (30 ஜன 2020): ஈரோட்டில் முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
ஈரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது.
இதை அறிந்து டாக்டர் சலீம் மற்றும் சிலர் சென்று கேட்டபோது, வங்கி ஊழியர்கள் கணினியில் ஏற்பட்ட சிறு கோளாறால் அவ்வாறு பதிவாகிவிட்டதாக சொல்லி சமாளித்துள்ளனர். ஆனால் அதெப்படி முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் மட்டும் ஏற்படும்? என கேட்டதற்கு சரியான பதில் இல்லை.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், வங்கியின் தில்லுமுல்லு என பொது மக்கள் விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையே இதனைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளதால், ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.