சென்னை (16 அக் 2020): முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். இது “800” என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எழுத்தாளர் ஜெயபாலன், சீமான், பாரதிராஜா, தியாகு, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் சிங்களவர்களுடன் ஒருவராக முரளிதரன் வாழ்ந்தவர். இவர் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறியிருக்கிறார்.
இந்நிலையில் பழனியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் எந்த தவறும் இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதா வேண்டாமா என ஆலோசனை செய்து ஓரிரு நாளில் பதில் அளிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.