மும்பை (07 ஏப் 2020): பாலிவுட் நடிகையான ஷஜா மொரானிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஷஜா மொரானி பிரபல இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் மகளாவார். நடிகர் ஷாரூக் கான் தயாரித்த ஆல்வேஸ் கபி கபி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். தன் மகளும் நடிகையுமான ஷஜா மொரானி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை கரீம் மொரானி உறுதி செய்துள்ளார்.
திங்களன்று ஷஜா மொரானி தமக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தார். அன்று, மாலை அவருக்கு கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஷஜா மொரானியின் சகோதரியும், பிரபல திரைப்பட நடிகையுமான ஜோவா மொரானிக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் இக்குடும்பத்துடன் தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
கடந்த மாதம் இலங்கை சென்று திரும்பிய ஷஜா மொரானிக்கு எந்த அறிகுறிகளும் இல்லவிட்டாலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.