மும்பை (12 ஜன 2020): பாலியல் தொழிலில் ஈடுபட்ட, பிக்பாஸ் 13 போட்டியாளரும் பிரபல பாலிவுட் நடிகையுமான அம்ரிதா தனாவோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மேற்கு புறநகரப் பகுதியான கோரேகாவ்ன் (கிழக்கு) பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சிலர் போலி வாடிக்கையாளர்கள் போல் உள்ளே நுழைந்து, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை ஆணையர் டாக்டர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீஸார் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 சிறுமிகளை மீட்டனர்.
பாலியல் தொழிலுக்கு சிறுமிகளை சப்ளை செய்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய தண்டனையியல் சட்டம் (ஐபிசி) 370 (3) மற்றும் 34 பிரிவுகளின் கீழும், ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின் 4 மற்றும் 5 பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இதேபோன்று ஜுஹுவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பத்து அழகிகளை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள நடிகை அம்ரிதா,பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொழில் விவகாரத்தில் பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.