சென்னை (28 ஜன 2020): டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்டு’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சாகச நிகழ்ச்சி – மேன் வெர்சஸ் வைல்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார். யாரும் இல்லாத காடு, மலை, வனப்பகுதியில் பியர் கிரில்ஸ் இறக்கி விடப்படுவார். அந்த வனத்தில் தனியாளாக எவ்வாறு தன்னைக் காத்து, தனக்கான உணவை தேடி உண்டு, உயிர் வாழ அவர் முயற்சிக்கிறார் என்பது தொடர்பாக அந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும். இந்த சாகச நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் மோடியைத் தொடர்ந்து, மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்கவுள்ளார். கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இன்றும் வியாழன் அன்றும் இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. காட்டுப்பகுதியில் ஒருநாளைக்கு ஆறு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்று வரும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டுள்ளார். ரஜினிக்குத் துணையாக அவருடைய இளைய மகள் செளந்தர்யாவும் சென்றுள்ளார்.
இந்நிலையில் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.