மும்பை (22 ஜூன் 2020): பாலிவுட் நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் தைரியமான சிலரில் ஒருவர் என்று இவருக்குப் பெயருண்டு!
கடந்த வருடம் இராமாயணம் குறித்த கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் இவர் அளித்த பதிலை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறியுள்ளார் நடிகை சோனாக்ஷி.
இதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர் “எதிர்மறையான அம்சங்களிலிருந்து விலகி இருப்பது தான் மன ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான முதல்படி. இப்போதெல்லாம் ட்விட்டரில்தான் எதிர்மறை அம்சங்கள் அதிகமாக இருக்கின்றன. நான் எனது ட்விட்டர் கணக்கை செயலிழக்கச் செய்கிறேன்” என்று கூறியுள்ளார். “இதற்கான எதிர்வினைகள் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இனி பற்றி எரியட்டும். எனக்கு அதுபற்றி கவலையில்லை” என்று சோனாக்ஷி தனது பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தை அடுத்து வாரிசு நடிகர்கள் திரைத்துறையில் செய்யும் அரசியல் குறித்த விவாதங்கள் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன. அப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த சோனாக்ஷி சின்ஹா> “ஒருவர் மரணமடைந்திருக்கும் நேரத்தில் சிலர் அவர்கள் பிரச்னைகளைச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அப்படி செய்வதை நிறுத்துங்கள். உங்களது எதிர்மறைக் கருத்தும் வெறுப்பும் இப்போது தேவையற்றது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.