எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 02 – வீடியோ!

Share this News:


240p Mobile Version For Download Click Here

சுலைமான் ஷாவின் முதுமையையும் அவர் முதுகிலுள்ள காயத்தையும் காரணம் காட்டி, அவருக்குக் கோத்திரத் தலைமையில் தொடரத் தகுதியில்லை என்ற எண்ணம் அவரின் இரத்தச் சகோதரனான குர்தோக்லுவின் மனத்தில் எழுகிறது. அவர் தமக்கு ஆதரவாளர்களிடையே அது குறித்து கலந்து பேசுகிறார்.

கோத்திரத்தின் வறுமையை நிலைமையும் வரும் குளிர்காலப் பிரச்சனையும் முன்வைத்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதனைச் சமாளிக்க இடம்பெயர்வது எனவும் பாக்தாத் அய்யூபி அரசின் கீழ் இருக்கும் அலெப்போவுக்குச் செல்லலாம் எனவும் குண்டோக்டு ஆலோசனை முன்வைக்கிறார். அலெப்போ அமீர், டெம்ப்ளர்களுக்கு எதிராக போராடப் படை திரட்டிக் கொண்டிருப்பதால் அவருக்கு அதிக வீரர்கள் தேவைப்படும். எங்களுக்குக் குடியிருக்க நிலம் ஒதுக்கித் தந்தால், எங்கள் வீரர்கள் போரில் உதவுவர் என அவரிடம் பேரம் பேசலாம். இதன் மூலம் நமக்கு நிலமும் கிடைக்கும்; சிலுவைப்படையினரின் பிரச்சனையையும் சமாளிக்கலாம் என்ற அவரின் ஆலோசனை சரியானது என முடிவெடுக்கப்படுகிறது.

அந்நேரத்தில் கரடோய்கர் தம் வீரர்களுடன் கோத்திரத்துக்கு வருகிறார். சிலுவைப்படையினரிடமிருந்து மீட்ட அக்கைதிகள் செல்ஜுக் அரசுக்குச் சொந்தமானவர்கள் எனவும் உடனே அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கும்படியும் சுலைமான் ஷாவிடம் கேட்கிறார். கோத்திரத்துக்கு வந்த விருந்தினர்களை உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பது தங்கள் பழக்கம் எனவும் என்ன விலை கொடுத்தும் அவர்களைப் பாதுகாப்போம் எனவும் அவர்கள் விரும்பும் வரை தம் கோத்திரத்தில் பாதுகாப்பாக இருப்பர் எனவும் சுலைமான் ஷா பதிலளிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கரடோய்கர், கைதிகளைத் தம்மிடம் ஒப்படைக்க இரு நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் இல்லையேல் செல்ஜுக் அரசின் கோபத்துக்கு ஆளாகுவீர்கள் எனவும் பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு எனவும் மிரட்டல் விடுத்துச் செல்கிறார்.

கோத்திரத்துக்கு எழுந்துள்ள புதிய பிரச்னை குறித்து எர்துருலுக்கும் அவர் சகோதரர் குண்டோக்டுவுக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. கண்முன் நடக்கும் அக்கிரமத்தைக் கண்டு பேசாமல் செல்லச் சொல்கிறாயா, அது சரியான செயலா என்று வருந்துகிறார் எர்துருல்.

தம் சகோதரனைக் கொன்ற எர்துருலைப் பழிவாங்குவேன் என டெம்ப்ளர் கமான்டர் டைட்டஸ், பிஸோலின் கல்லறையில் சபதமெடுக்கிறார்.

செல்ஜுக் அரசுடன் மோதும் நிலையினை ஏற்படுத்தியதற்குக் காரணம் எர்துருலின் அடங்காதக் குணம்தான் என குர்தோக்லு, குண்டோகுவிடம் மூட்டி விடுகிறார். கோத்திரம் வறுமையில் இருக்க இருப்பிடம் தேடி அலையும் சூழலில் இருக்கும்போது, சுல்தான் அலாவுதீனுடன் பகைமை ஏற்படுத்திக் கொள்வது கோத்திரத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உருவாகிறது.

தாம் எர்துருலால் கொல்லப்படுவதாக கனவு காண்கிறார், சுலைமான் ஷா .அதற்கான அர்த்தமென்ன என இல்யாஸ் ஃபகிஹிடம் கேட்கிறார் அவர். அதற்கு இரண்டு அர்த்தமிருக்கலாம் எனவும் ஒன்று இனிவரப்போகும் நாட்கள் மிக மோசமானவைகளாக இருக்குமென்பதற்கான அடையாளம் என்றும் மற்றொன்று சுலைமான் ஷாவுக்குப் பின்னரான தலைவர் யார் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

இத்துடன் இப்பகுதி முடிவடைகிறது.

எர்துருல் சீசன் 1 தொடர் 1 | எர்துருல் சீசன் 1 தொடர் 3


Share this News:

Leave a Reply