கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாகவும் ஜனவரி 28, 2021 அன்று தனது மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், தடுப்பூசியின் பக்க விளைவுகளால் மார்ச் 1 ஆம் தேதி இறந்துவிட்டதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான மாநில அரசின் முடிவின் ஒரு பகுதியாக மகளுக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்பட்டன. கோவிட் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்றும் உடலுக்கு எந்த ஆபத்தும் அல்லது அச்சுறுத்தலும் இருக்காது என்றும் சினேகலுக்கு உறுதியளிக்கப்பட்டது.
சுகாதாரப் பணியாளர் என்பதால் கல்லூரியில் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் எனினும் தடுப்பூசியால் மகள் இறந்துவிட்டார் எனவே என் மகளின் இழப்பிற்கு நஷ்ட ஈடாக ரூ 1000 கோடி வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.