பிரக்யாராஜ் / அலஹாபாத் (17 ஜன 2023): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஷாஹி மசூதி பொதுப்பணித் துறையால் இடிக்கப் பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் (அலஹாபாத்) ஹண்டியா பகுதியில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷெர்ஷா சூரி காலத்தில் கட்டப்பட்டது இந்த மசூதி.
தற்போது ஜிடி சாலையை விரிவு படுத்துவதற்காகவே இந்த மசூதி இடிக்கப்பட்டது என்று பொதுப் பணித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசூதியை இடிப்பதற்கான முன்மொழிவுக்குத் தடை கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மசூதியின் இமாம் எம்.டி பாபுல் ஹுசைன் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கீழ் நீதிமன்றத்தில் ஜனவரி 16 ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். ஆனால் நீதிமன்ற விசாரணைக்கு முன்பே அவசரம் அவசரமாக இந்த மசூதி இடிக்கப் பட்டுள்ளது.
A historical mosque is being bulldozed in UP, India, to widen the road! pic.twitter.com/IsUWunoIJy
— Ashok (@ashoswai) January 15, 2023
மேலும் இமாம் பாபுல் ஹுசைன் கூறுகையில், “இந்த விவகாரம் கீழ் நீதிமன்றத்திற்குப் போகிறது என்று நாங்கள் அதிகாரிகளிடம் கூறினோம், ஆனால் அதிகாரிகள் அதனை கேட்காமல் இடித்துத் தள்ளி விட்டனர்” என்று கூறினார்.
மசூதி இடிக்கப்படும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் மக்கள் பரவலாகப் பகிர்ந்து, மாவட்ட நிர்வாகத்தையும், உத்தரபிரதேச அரசையும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர்.