கவுஹாத்தி (28 அக் 2022): கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.
ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்டிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகன்சன் ஆகியோர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாடு கடத்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளுடன் ஸ்வீடன் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை விடுவித்த போலீசார் பின்பு அவர்களை நாடுகடத்தினர்.
சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள், மத பிரசாரம் செய்ததாக வழக்குபதிவு செய்த போலீசார், நஹர்கட்டிய நகரின் தேயிலைத் தோட்டப் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தோட்டத் தொழிலாளர்கள் காவல் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு அவர்களைக் கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இந்தியாவில் மத போதனை நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி இல்லை. அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14 (விசா நிபந்தனைகளை மீறுதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.