திருவனந்தபுரம் (12 ஆக 2021): இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே தற்போது அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலமாக கேரளா இருந்துவருகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்தநிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகும் 40 ஆயிரம் பேருக்குக் கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் எனவும் அங்கு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
மேலும், அவ்வாறு புதிய மரபணு மாற்றமடைந்த வைரஸ் உருவாகியுள்ளதா என கண்டறிய இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பிறகும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேருக்கும் மரபணு வரிசைமுறை சோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்தநிலையில், இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை மறுத்துள்ளது. கேரளாவில் புதிய மரபணு மாற்றமடைந்த கரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை என்றும், முற்றிலும் தவறானவை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.