பிரதமரின் 8 PM அறிவிப்புகள் பயன் தருமா? ஓர் அலசல்

Share this News:

கொரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி, நான்காவது முறையாக நேற்று (மே 12, 2020) இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்காக இந்தியில் உரையாற்றினார்.

ஒவ்வொரு உரையின் போதும் புதிய அறிவிப்புகளைச் செய்து மக்களை கடைபிடிக்க வலியுறுத்தி வந்த பிரதமர் மோடி, இம்முறை பொருளாதாரம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதன்மூலம் மறுநாள் ஊடகங்களின் தலைப்புச் செய்தியை ஆக்கிரமித்திருந்தார்.

அரசு தரப்பில் முன்னேற்பாடுகள் எதுவுமின்றி வெறும் நான்கு மணிநேர அவகாசத்தில் முதல் ஊரடங்கு அறிவிக்கப் பட்டதால், சாமானிய மக்கள் பலரும் பாதிக்கப் பட்டு அவதிக்குள்ளானது உலகம் அறிந்த செய்தி.

முந்தைய ஊரங்குகளில் பாதிக்கப்பட்டு, இன்றுவரை வாழ்வாதாரம் இழந்து அவதிப்படும் ஏழை – நடுத்தர – தினக்கூலி மக்களுக்கு நன்மை தரும் வகையில் ஏதேனும் இம்முறை பிரதமர் அறிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவை குறித்து சிறு வருத்தம்கூட தெரிவிக்காமல், தேர்தல் பரப்புரை போன்று இருந்தன நேற்றைய அறிவிப்புகள்.

நேற்றைய அறிவிப்பின் சாராம்சம் “சுய சார்பு இந்தியா”வை உருவாக்குவோம் என்பது தான். சுருக்கமாக அவர் சொன்னது “ஒரு பலமான, சுயசார்புமிக்க, பிறரின் தேவைகளை நாடாத புதிய இந்தியாவை உருவாக்க இந்த பேரிடரை நல்வாய்ப்பாக பயன்படுத்தி அடித்தளம் இடுவோம்” என்பதுவே ஆகும்.

இன்றைய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு, பாஜக ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் புதிய அறிவிப்பாக தோன்றலாம். ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் முழக்கமும் செயல்பாடுகளும் மேற்கூறிய வாசகங்களின் அடிப்படையில்தான் அமைந்திருந்தன என்பது பலரும் அறியாத உண்மை.

NDTV எழுத்தாளரான கிருஷன் பார்தாப் சிங்

நேரு குறித்த வரலாறை ஆய்வு செய்து வரும் NDTV எழுத்தாளரான கிருஷன் பார்தாப் சிங் குறிப்பிடும் போது “நேற்றைய அறிவிப்பானது, 1957 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது குர்கான் நகரத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு பயன்படுத்திய வாசகங்களை ஒத்து இருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மோடி அவர்களும் அவர் சார்ந்த பாஜகவினரும் மூச்சுக்கு முன்னூறு முறை நேரு அவர்களை பழிப்பதையே அரசியல் யுத்தியாக கொண்டிருக்கும் நிலையில், நேரு அவர்களில் சொல்லை மாற்றமின்றி, மோடி பயன்படுத்தியுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

கவர்ச்சியான பெயர்கள் வைத்து அறிவிப்புகளை வெளியிடுவதில் பிரதமர் மோடிக்கு நிகர் வேறு யாரும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு கடந்த 6 ஆண்டுகளில் பல அறிவிப்புகளை செய்துள்ளார். ஆனால், அத்தகைய அறிவிப்புகளை செயல் வடிவத்துக்கு கொண்டு வருவதில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இருப்பதாக அறிய முடியவில்லை.

மோடி, பிரதமர் ஆன உடன் “ஸ்வச் பாரத்” (தூய்மை இந்தியா) எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டு, பிரதமர் முதல் பாஜகவின் வார்டு கவுன்சிலர் வரை குப்பை அள்ளி சுத்தம் செய்வது போன்ற புகைப்பட விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாகின. ஆனால் யதார்த்த இந்தியாவில், தூய்மையில் எந்த முன்னேற்றமும் இன்று வரை இருப்பதாக பார்க்க முடியவில்லை.

அதே போல் National Mission for Clean Ganga என்ற கவர்ச்ச்சிப் பெயரில் அமைந்த, கங்கை நதி தூய்மை திட்டத்துக்கு, மக்கள் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கியும் கங்கை தூய்மை அடையவில்லை. ஊரடங்கின் உதவியால் நாற்பது சதவீதம் தானாகவே தூய்மை ஆகியுள்ளது கங்கை நதி. தற்போது, Self Reliant இந்தியா எனும் இந்த பெயர் கவர்ச்சிகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதே போன்று கவர்ச்சிகரமாக முன்னர் அறிவிக்கப்பட்ட “Make in India”, “Skill India”, “Start-Up India” போன்ற திட்டங்களின் நிலை என்னவென்று இது வரை தெரியவில்லை.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இன்றைய அறிவிப்பும் பழையது போன்று ஏட்டுச் சுரைக்காயாக தான் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமரின் உரையில் வெளியான இன்னொரு அறிவிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்கள்  இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்காக செலவழிக்கப்படும் என்பதே. ஆனால் இந்த 20 லட்சம் கோடிகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைக்கால நிவாரண தொகை மற்றும் ரிசர்வ் வாங்கி அவசர நிலைக்கு என சந்தைக்குள் புழக்கத்தில் விட்ட தொகையையும் உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கினால் அல்லல்படும் சிறு – குறு வியாபாரிகளுக்கோ, புலம் பெயர்ந்து வாழும் வேற்று மாநில தொழிலாளர்களுக்கோ, வேலையில்லாத காரணத்தினால் அன்றாட தேவைகளுக்கே பணமின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களின் இன்னல்களை போக்கவோ இந்த 8 மணி பிரச்சார உரையில் எதுவும் இல்லை.

சாமானிய இந்தியர் எவருக்கும் எவ்விதப் பயனுமின்றி, பெரிதும் ஏமாற்றம் அளித்துக் கொண்டிருப்பவைதான், பிரதமர் மோடியின் இந்த வெற்று அறிவிப்புகள் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை: முஹம்மத் ஷேக்
(தொடர்புக்கு: sms0583@yahoo.com)


Share this News: