பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

Share this News:

பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,.

மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பரபரப்பு குற்றம்சாட்டினார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் கூட சான்றிதழ் வழங்காமல் தாமதித்தனர்.

முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்த தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதப்படுத்தினர். முதலில் 119 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான பட்டியலையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஊழல்கள் ஜனநாயகத்தில் என்றும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் மறுத்து விளக்கமளித்தது. அதைத் தொடர்ந்து தேஜஸ்வியும் வாக்கு எண்ணிக்கை குறித்து குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இது தொடர்பாக ஆர்ஜேடி சார்பில் தேர்தல் ஆணையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *