புதுடெல்லி (23 பிப் 2020): டெல்லி ஜாஃப்ராபாத் போராட்டக் காரர்கள் மூன்று நாட்களில் கலைந்து செல்ல வேண்டும் என்று பாஜக தலைவர் கபில் மிஸ்ரா கெடு விதித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் அரசும் கடுகளவும் இவ்விவகாரத்தில் பின் வாங்காமல் பிடிவாதமாகவே உள்ளது.
இதனால் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன. டெல்லி ஷஹீன் பாக்கை தொடர்ந்து நாடெங்கும் ஷஹீன் பாக் மாடல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் ஷஹீன் பாக் போலவே 1000 க்கும் அதிகமான பெண்கள் டெல்லி மஜூபூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜகவின் தலைவர், கபில் மிஸ்ரா தலைமையில் சிஏஏ ஆதரவு பேரணி இன்று நடைபெற்றது. அப்போது அவர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பகுதியில் வந்தபோது, வன்முறை வெடித்தது. இதனை அடுத்து மாஜ்பூர் பகுதி பெரும் கலவர பூமியாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இது இப்படியிருக்க பாஜக தலைவர் கபில் மிஸ்ரா போராட்டக் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஜஃப்ராபாத், மஜ்பூர் பகுதி போராட்டக் காரர்கள் மூன்று நட்களுக்குள் கலைந்து செல்ல வேண்டும். என்றும், இல்லையேல் நாங்களே களத்தில் இறங்கி போராட்டக் காரர்களை துரத்தி அடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வரவிருப்பதால், அவர் இந்தியாவிலிருந்து திரும்பி சென்றதும் நாங்கள் களத்தில் இறங்குவோம்” என்று அவர் தெரிவித்துள்ளர்.
மேலும் போலீஸ் இவ்விவகாரத்தில் எந்த சமாதான முயற்சி மேற்கொண்டாலும் எடுபடாது என்றும் அவர் போலீஸை எச்சரித்துள்ளார்.