புதுடெல்லி (19 மார்ச் 2020): கொரொனா வைரஸ் நிவாரணமாக பாஜக அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் ஆதாரமில்லாத சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
சீனாவில் மட்டுமே பரவிய கொரோனா உலகமெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இன்றுவரை 169 பேர் பாதிக்கப் பட்டனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா குறித்த வதந்தியும் பரவி மக்களை அச்சப்பட வைத்துள்ளது. இது இப்படியிருக்க பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் கொரோனா வைரஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்கள் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது சூரிய வெளிச்சத்தில் நிற்கவேண்டும். சூரிய வெளிச்சம் ‘விட்டமின் டி’ ஊட்டச்சத்தை உருவாக்குகிறது. இந்த விட்டமின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் கொல்லும்’’ என்றார்.
இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படாத கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடிப்பில் உலக மருத்துவ அறிஞர்கள் ஆய்வில் உள்ள நிலையில் இவரின் கருத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.