அஹமதாபாத் (17 டிச 2022): குஜராத்தில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சலீம் நூர் முகமது வோரா தனது 22 வயது மனைவிக்கு உடனடி தலாக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சலீம் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சலீமின் மனைவி சித்திக்பான் அளித்த புகாரில், “ஏப்ரல் மற்றும் சமீபத்தில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் என் கணவர் எனக்கு வாய்மொழியாக முத்தலாக் கொடுத்தார். அதை தன் மொபைலிலும் பதிவு செய்துள்ளேன். இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியிலும் இதை அறிவிக்கும் கடிதத்தையும் அவர் அனுப்பினார்.
கடந்த சில மாதங்களாக எனது, கணவர் மற்றும் மாமியாரால் துன்புறுத்தல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளை அனுபவித்தேன். இது குறித்து மெஹ்சானா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிவிஷன் காவல் நிலையத்திற்கு பல வின்னப்பங்கள் அனுப்பினேன் ஆனால் நடவடிக்கை இல்லை” என்று அவர் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சலீம் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.