பார்மர் (06 பிப் 2023): : ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் மத வெறுப்பு மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக பதஞ்சலி நிறுவன உரிமையாளரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2 அன்று துறவிகள் கூட்டத்தில் பாபா ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தின் பக்கம் திரும்புவதாகவும், இந்துப் பெண்களைக் கடத்துவதாகவும் ராம்தேவ் பேசியுள்ளார்.
மேலும் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக ராம்தேவ் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர் அளித்த புகாரின் அடிப்படையில்ம் பாபா ராம்தேவ் மீது ஐபிசி பிரிவுகள் 153A (வெவ்வேறு மதப் பிரிவுகளுக்கு இடையே மோதலை தூண்டுதல்), 295A (எந்தவொரு மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல் மற்றும் தெரிந்தே மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன்) மற்றும் 298 (தெரிந்த நோக்கத்துடன் கருத்துக்களைக் கூறியது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.