புதுடெல்லி (05 மார்ச் 2020): டெல்லி கலவரம் தொடர்பாகவும், ஏன் கலவரத்தை தூண்டிய பெரிய மனிதர்களைக் கைது செய்யவில்லை என்றும் கேள்விகள் கேட்ட கவிஞர் ஜாவித் அக்தார் மீது பிஹாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி இனப்படுகொலையில் 46 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி பிரமுகர் தாஹிர் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது வீட்டிற்கும் சீல் வைத்தனர்.
இவற்றை கவிஞர் ஜாவித் அக்தார் விமர்சித்திருந்தார். “டெல்லி கலவரத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் இதன் பின்னணியில் இருப்பதும், வெறுப்பூட்டும் வகையில் பேசியதற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால் தாஹிர் உசேன் மட்டும்தான் டெல்லி போலீசாரின் கண்களுக்கு தெரிந்தாரா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜாவித் அக்தார் இவ்வாறு கருத்து தெரிவித்ததற்கு எதிராக பிஹாரில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிஹார் போலீசார் ஜாவித் அக்தார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.